யார் இந்த கபாடி வீரர் அபினேஷ் நடராஜன்? புரோ கபாடி உலகின் நட்சத்திரம்!
புரோ கபடி சாம்பியன் புனேரி பல்டன் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், அபினேஷ் நடராஜன் - ஒரு மிகச் சிறந்த தடுப்பாட்ட ஆல்ரவுண்டர். கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் 2001 ஆம் ஆண்டு பிறந்த அபினேஷ், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கபாடி வீரர்களை உருவாக்கிய GFC மூலச்சல் கபாடி அணியைச் சேர்ந்தவர். ஆல்வின் மோகன், டென்சீலின், ஜெபின், வினோத், புரூடின், பார்த்தீபன், ஸ்டூவர்ட்சிங் போன்ற பல ஜாம்பவான்களை உருவாக்கிய இந்த அணியே அவரது தாய் வீடு.
![]() |
Abinesh Nadarajan |
கபாடி களத்தில் அபினேஷின் அசுர வளர்ச்சி
அபினேஷின் கபாடி பயணம் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கியது. 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கான தேசிய கபாடி போட்டியில் தொடர்ச்சியாக விளையாடி, தனது திறமையை மெருகேற்றிக் கொண்டார். சேலம் சாய் அணியின் மரியாதைக்குரிய பயிற்சியாளர் அறிவழகன் ஐயா அவர்களால் பட்டை தீட்டப்பட்ட வைரமாக, சேலம் சாய் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார்.
2018 ஆம் ஆண்டு அகில இந்திய ஜூனியர் கபாடி போட்டியில் சாய் அணிக்காக விளையாடி, அரியானாவுடன் நடந்த இறுதிப் போட்டியில் கடைசி நிமிடங்களில் களமிறங்கி, சாய் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த சிறப்பான ஆட்டமே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்திய கபாடியின் "போனஸ் நாயகன்" அனுப்குமார் இவரைக் கவனித்து, புரோ கபாடியில் புனேரி பல்டன் அணிக்காக இவரைத் தேர்ந்தெடுத்தார்.
ஜூனியர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி, அகில இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் 3 ஆம் இடத்தைப் பெற்றுத் தந்தது அவரது சிறப்புக்கு ஒரு சான்று. சென்னை SRM கல்லூரியில் படிக்கும்போதே, தனது சிறப்பான விளையாட்டுத் திறமையால் ICF அணியில் வேலைவாய்ப்பு பெற்றார். அபினேஷ் போன்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு நல்கிய ICF அணி பயிற்சியாளர் செல்வின் மற்றும் ICF அணியினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
தேசிய அணி கனவை நோக்கி...
2023 ஆம் ஆண்டு நடந்த சீனியர் தமிழக அணிக்கான போட்டியில் அபினேஷ் மிகச் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி வீரர்கள் தேர்வு பயிற்சி முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது தேசிய அணி கனவை நோக்கிய ஒரு முக்கிய படி.
2024 இல், ICF அணிக்காக விளையாடி, ரயில்வே அணிகளுக்கான கபாடி போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுத் தந்தார். பின்னர், தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியன் ரயில்வே அணிக்கு விளையாடி, 2 ஆம் இடத்தைப் பெற முக்கிய பங்காற்றினார். தற்போது, இந்திய அணி பயிற்சி முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது அவரது அயராத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.
அபினேஷின் தனித்துவமான ஆட்ட பாணி
அபினேஷ் இந்தியாவின் டாப் 3 ரைட் கவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது ஆட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
ரைடர்கள் அவரைத் தொட்டு புள்ளிகள் எடுப்பது மிகவும் கடினம்.
தனி ஒருவராகப் பாய்ந்து வரும் ரைடரை அடித்து வெளியே தள்ளும் அசாத்தியத் திறன் இவருக்கு உண்டு.
குறைவான வீரர்கள் இருக்கும்போதும் சிறப்பான தடுப்பாட்டத்தைக் வெளிப்படுத்துவார்.
இன்னும் அனுபவமும், சில நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டால், அவர் கட்டாயம் இந்திய அணிக்குத் தேவை என்ற நிலை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றியும் லட்சியமும்
தன் வாழ்வின் திருப்புமுனை அல்லது தன்னம்பிக்கை கொடுத்த போட்டி என சந்திரன் ரஞ்சித் வாய்ப்பு கொடுத்த பன்னாங்கொம்பு கபாடி போட்டியைக் குறிப்பிடுகிறார்.
அபினேஷ், தன்னை உருவாக்கிய GFC மூலச்சல் அணியின் பயிற்சியாளர்கள் பிராங்கோ, பெர்லின், பார்த்தீபன் ஆகியோருக்கும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவிய சேலம் சாய் அணி பயிற்சியாளர் அறிவழகன் அவர்களுக்கும், புரோ பயிற்சியாளர் BC ரமேஷ் மற்றும் ICF இன் செல்வின் ஆகியோருக்கும் தனது நன்றிகளை உரித்தாக்குகிறார்.
கபாடியில் தனது ரோல் மாடல் என்றால், அது தடுப்பாட்டத்தில் கபாடி உலகை கால் நூற்றாண்டு காலம் கட்டி ஆண்ட தஞ்சை சேரலாதன் அண்ணாதான் என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.
அவரிடம் பேசியபோது, "இந்திய அணிக்கு விளையாடுவதுதான் தனது லட்சியம்" என்று அபினேஷ் உறுதிபடத் தெரிவித்தார். மேலும், இளம் தலைமுறையினர் கடினமான மற்றும் முறையான உடல் பயிற்சி, கபாடி பயிற்சி, மரியாதையுடன் நடந்து கொள்வது போன்ற திறன்களை வளர்த்துக் கொண்டால், கபாடியில் வளர்ச்சி தானாக அவர்களை வந்து சேரும் என்றும் பகிர்ந்துகொண்டார். அபினேஷின் இந்தக் கருத்துகள், வளரும் வீரர்களுக்கு ஒரு சிறந்த உந்துதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
TAGS: Abinesh Nadarajan | Pro Kabaddi | Puneri Paltan |Kabaddi Player | Tamil Nadu Kabaddi
0 Comments